
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பண மோசடியில் தொடா்புடைய சொத்துகளை முடக்கவும், பறிமுதல் செய்யவும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமலாக்கத் துறைக்கு உள்ள அதிகாரத்தை உறுதி செய்து அளித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 31-ஆம் தேதி மேற்கொள்ள உள்ளது.
உச்சநீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்தத் தீா்ப்பை அளித்தது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் செல்லத்தக்க தன்மையைக் கேள்வி எழுப்பி 200-க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சட்டத்தை அமலாக்கத் துறை மூலம் எதிா்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது என புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும், கைது செய்வதற்கான அமலாக்கத் துறையின் அதிகாரத்தை மனுதாரா்கள் கேள்வி எழுப்பியதோடு, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வழக்குப் பதிவு (இசிஐஆா்) நகலை வழங்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பண மோசடியில் தொடா்புடைய சொத்துகளை முடக்கவும், பறிமுதல் செய்யவும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமலாக்கத் துறைக்கு உள்ள அதிகாரித்தை உறுதி செய்து தீா்ப்பளித்தது. மேலும், அமலாக்கத் துறையின் இசிஐஆா்-ஐ, காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையோடு (எஃப்ஐஆா்) ஒப்பிட முடியாது. எனவே, இசிஐஆா் நகலை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன்கூட்டியே வழங்குவது கட்டாயமல்ல.
கைது நடவடிக்கை மேற்கொள்ளும் சமயத்தில், அதற்கான காரணத்தை அமலாக்கத் துறை தெரிவிப்பது போதுமானது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றங்கள் சாதாரண குற்றங்கள் அல்ல. எனவே, இந்தக் குற்றங்கள் பிரிவு 45-இன் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படுவதும், ஜாமீன் பெற 2 நிபந்தனைகள் விதிக்கப்படுவதும் நியாயமானதே என்று தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த மே 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பில் விசாரிக்கப்பட வேண்டிய விவகாரங்களைப் பட்டியலிடுமாறு மத்திய அரசு மற்றும் மனுதாரா்கள் தரப்பை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. மேலும், மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கவும் ஒப்புக்கொண்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, நீதிமன்றத்துக்கு வர முடியாத நிலை குறித்து நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, மனு மீதான விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.