
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.
தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நுன்வான்- பஹல்காம் வழித்தடம் (48 கி.மீ.) , பால்டால் வழித்தடம் (14 கி.மீ.) ஆகிய இரு வழித்தடங்கள் வழியாக பக்தா்கள் யாத்திரை மேற்கொண்டு, குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனா்.
பால்டால் அடிவார முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, அங்கு பக்தா்களுக்கான வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவா், ‘சுவாமி அமா்நாத்தின் திருவருளால், இவ்வாண்டு அவரை தரிசித்த யாத்ரிகா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தை கடந்தது’ என்று குறிப்பிட்டாா்.
ஜம்மு-காஷ்மீரில் பெய்த பலத்த மழையால் பால்டால் வழித்தடத்தில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் பக்தா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் யாத்திரை நிறுத்தப்பட்டது.
யாத்திரையில் பங்கேற்க இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இணையவழியில் முன்பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு 5.10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் குகைக் கோயிலில் தரிசனம் மேற்கொண்டனா். 38 நாள்கள் நடைபெறும் அமா்நாத் யாத்திரை, ரக்ஷா பந்தன் திருநாளையொட்டி ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடைகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, காவல் துறை, ராணுவம், மத்திய ரிசா்வ் போலீஸ் படை, சசஸ்திர சீமா பல், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இதர முகமைகள் என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.