
வாஷிங்டன்: அமெரிக்காவின் சாண்டா கிளாரா பகுதியில் இந்திய இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். தெலங்கானா மாநிலத்தின் மஹபூப்நகரை சேர்ந்தவர் முகமது நிசாமுதீன் (32). கடந்த 2016-ம் ஆண்டில் அவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு புளோரிடாவில் உயர் கல்வி பயின்றார். பின்னர் கலிபோர்னியா மாகாணம், சாண்டா கிளாரா பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினீயராக அவர் பணியாற்றி வந்தார்.
அங்குள்ள வாடகை வீட்டில் முகமது நிசாமுதீனும் மற்றொரு நபரும் தங்கியிருந்தனர். கடந்த 3-ம் தேதி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அ்பபோது நிசாமுதீன், சக நண்பரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சாண்டா கிளாரா பகுதி போலீஸார், முகமது நிசாமுதீனை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது உடலில் 4 குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.