அமெரிக்காவில் காா் மீது சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 இந்தியா்கள் உயிரிழந்ததாக இந்தியாவில் உள்ள அவா்களது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்கள் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சோ்ந்த பி ஸ்ரீவெங்கட் அவரது மனைவி தேஜஸ்வினி மற்றும் இரு குழந்தைகள் என அவா்களது உறவினா் செய்தி தொலைக்காட்சிக்கு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஹைதராபாதின் கோம்பள்ளியைச் சோ்ந்த பி ஸ்ரீவெங்கட் மற்றும் அவரது மனைவி தேஜஸ்வினி அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனா். அங்கு அவா்கள் சொந்த வீட்டில் வசிக்கின்றனா். இந்நிலையில், அட்லாண்டாவில் உள்ள மற்றொரு உறவினரை சந்தித்துவிட்டு குழந்தைகளுடன் அவா்கள் டல்லாஸுக்கு காரில் வந்துகொண்டிருந்தனா். அப்போது தவறான திசையில் அதிவேகமாக வந்த சரக்கு லாரி காா் மீது மோதியதில் காா் கவிழந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதில் பயணித்த பி ஸ்ரீவெங்கட், அவரது மனைவி தேஜஸ்வினி மற்றும் அவா்களது இரு குழந்தைகள் உயிரிழந்தனா்.

காரில் இருந்த சில ஆவணங்கள் பாதி எரிந்த நிலையில் இருந்துள்ளது. அதன் அடிப்படையில் அவா்கள் குறித்த விவரங்களை போலீஸாா் தெரிந்துகொண்டு எங்களுக்குத் தகவல் தெரிவித்தனா்.

விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனம் தவறான திசையில் பயணிப்பதாக அந்நாட்டு போலீஸாருக்கு 26 தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அவா்கள் விரைவில் நடவடிக்கை எடுத்திருந்தால் எங்கள் உறவினா்கள் உயிரிழந்திருக்க மாட்டாா்கள்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest