ANI_20241219175210

புது தில்லி: சீனா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியில் போட்டித்தன்மை மேலும் அதிகரிக்கும் என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க சந்தையில் பொருள்களின் எண்ணிக்கை மற்றும் அளவில் இந்தியாவின் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன.

சீன பொருள்களுக்கு 30 சதவீதம், கனடா பொருள்களுக்கு 35 சதவீதம், மெக்ஸிகோ பொருள்களுக்கு 25 சதவீதம் என பல்வேறு நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியில் போட்டித்தன்மை மேலும் அதிகரிக்கும்.

அமெரிக்காவுக்கு செய்யும் ஏற்றுமதியின் 30 பிரிவுகளில் உள்ள 22 பிரிவுகளில் இந்தியாவுக்குப் போட்டித்தன்மை பெருகக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்தப் பிரிவுகளில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா, கனடா, மெக்ஸிகோ முன்னணியில் உள்ளன.

அமெரிக்காவுக்கு கனிமங்கள் மற்றும் எரிபொருள்கள், ஆடைகள், மின்னணு கருவிகள், பிளாஸ்டிக், கடல் உணவுகள், அறைகலன்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா லாபம் அடைய வாய்ப்புள்ளது. அவற்றின் அமெரிக்க சந்தை மதிப்பு 1,265 பில்லியன் டாலராகும் (சுமாா் ரூ.10,880 கோடி).

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை ஆதரிக்கவும், ஏற்றுமதியில் போட்டித்தன்மையை ஊக்குவிக்கவும், உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை தோல், காலணி, அறைகலன், கைவினைப் பொருள் உள்ளிட்ட துறைகளுக்கு நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் சேவைகள் துறையை சாா்ந்ததாக இருக்க வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு வலுவான முக்கியத்துவத்தை இந்தியா அளிக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இதனிடையே இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தைகளைத் தொடர, மத்திய வா்த்தக அமைச்சக குழு அமெரிக்கா தலைநகா் வாஷிங்டனுக்கு சென்றுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest