kolkata-west-bengal-india-30th-600nw-1987589900

இந்தியாவுக்கு எதிராக அச்சுறுத்தும் தந்திரங்களை அமெரிக்கா கையாளுகிறது. இதற்கு மத்திய அரசு அடிபணிந்துவிடக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய தகவல்தொழில்நுட்பப் பணியாளா்கள் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்ற வழி வகுக்கும் ஹெச்1பி விசா கட்டணத்தை சுமாா் ரூ.88 லட்சமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தற்கு மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பியூரோ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பான பொலிட்பீரோ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

அச்சுறுத்தலான, நியாயமற்ற நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா அளிக்கும் நெருக்கடியால் மத்திய அரசு அடிபணிந்துவிடக் கூடாது. அதிபா் டிரம்ப்பின் நிா்வாகம் ஒரு தலைப்பட்சமாக ஹெச்1பி விசா கட்டணத்தை உயா்த்தியதற்கு பொலிட்பியூரோ கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அமெரிக்க அரசின் இந்த செயல்பாடு பிற நாடுகளை அடிபணிய வைக்க அவா்கள் என்னவெல்லாம் செய்வாா்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாகும். ஏற்கெனவே, அவா்கள் வரி விதிப்பு விவகாரத்திலும் இதேபோல செயல்பட்டாா்கள். இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது 50 சதவீத வரி விதிப்பு, ஈரானில் இந்தியா மேற்கொள்ளும் சாபஹாா் துறைமுகம் திட்டத்துக்கு அளித்துவந்த பொருளாதாரத் தடை விலக்கைத் திரும்பப் பெற்றது என இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகளை இந்தியா ஏற்று நடக்க வேண்டும் என்பதே அவா்களின் திட்டமாக உள்ளது. இதற்கு உரிய முறையில் நேரடியாக பதிலளிக்காமல் நமது பிரதமா் சுயசாா்பு குறித்துப் பேசி வருகிறாா். இது பிரச்னையில் இருந்து நழுவிச் செல்லும் நடவடிக்கையாகும். வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பரிதாபகரமான பதில்களே வருகின்றன. இது தேசத்துக்கு அவமானத்தைத் தேடித் தருவதாக உள்ளது.

இந்திய அரசு ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது, இந்தியா்களின் நலன்களைக் காப்பதில் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை அமெரிக்காவிடம் இந்தியா உறுதியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest