
அமெரிக்காவில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வந்த இந்திய மாணவர், அந்நாட்டு காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் (வயது 30), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புளோரிடா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
மேலும், கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பகுதிநேரமாக பணிபுரிந்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில், விடுதி அறையில் உடன் இருந்தவரை கத்தியால் குத்தியதற்காக நிஜாமுதீனை அமெரிக்க காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி நடந்த நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பிறகே நிஜாமுதீனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க காவல்துறை அறிக்கை
நிஜாமுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
“கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி சாண்டா கிளாராவில் உள்ள விடுதியில் உடன் இருந்தவரை நிஜாமுதீன் கத்தியால் குத்தியுள்ளார். அறையில் இருந்த நண்பரை பல முறை கத்தியால் குத்தி நிஜாமூதின் காயப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையின் அவசர எண் 911 -க்கு தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்ததில், அறையில் ஒருவர் கத்தியுடன் மற்றொருவரை பிடித்து வைத்திருந்ததால், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
உடனடியாக இருவரும் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நிஜாமூதின் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறையில் காயங்களுடன் மீட்கப்பட்டவர் சிகிச்சையில் உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சாண்டா கிளாரா மாவட்ட நீதிமன்றமும், சாண்டா கிளாரா காவல் துறையும் கூட்டு விசாரணையை நடத்தி வருகின்றன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனவெறியால் பாதிப்பு?
நிஜாமுதீன் இனவெறியால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக லிங்க்டுஇன் தளத்தில் நிஜாமுதீன் வெளியிட்ட பதிவையும் குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர்.
அந்த பதிவில், ”இன வெறுப்பு, இன துன்புறுத்தல், சித்திரவதை, ஊதிய மோசடி, தவறான பணிநீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். அமெரிக்கர்களின் வெள்ளை மேலாதிக்கம் மற்றும் இனவெறி மனநிலை முடிவுக்கு வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் தொடர்ந்து துப்பறியும் நபரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் நிஜாமுதீன் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், நிஜாமுதீனின் குற்றச்சாட்டு மற்றும் அவரது என்கவுன்டர் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், சாண்டா கிளாரா மருத்துவமனையில் உள்ள அவரது உடலை இந்தியாவுக்கு எடுத்துவர உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உதவியை பெற்றோர்கள் நாடியுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.