
புதுடெல்லி: அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் ஒருவர் திருட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தாக்குதல், திருட்டு, ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்து பொருட்களைத் திருடுதல் போன்ற செயல்களில் நீங்கள் அமெரிக்காவில் ஈடுபட்டால், அது சட்ட சிக்கல்களை உருவாக்கும். அது உங்கள் விசா நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, அதன்பின்னர் நீங்கள் அமெரிக்காவுக்குள் என்றைக்குமே நுழையாதபடி செய்யும். சட்டம், ஒழுங்கை அமெரிக்கா மதிக்கிறது. அமெரிக்க சட்டதிட்டங்களை இங்குவரும் வெளிநாட்டவரும் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கிறது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,