HighCourtch1

சென்னை: தமிழக அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியன் ஓவா்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற ரூ. 30 கோடி கடனை சகோதர நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதால், ரூ. 22 கோடியே 48 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக அமைச்சா் நேருவின் சகோதரா் ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்கு எதிராகப் புகாா் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் அமைச்சா் நேருவின் சகோதரா் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் மீது 2021-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

இந்த நிலையில், எழும்பூா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் நேருவின் சகோதரா் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை சாா்பில், சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதால், சிபிஐ வழக்கை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு ரவிச்சந்திரன் தரப்பில், கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி, அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரருக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தாா். இதில் ரூ.15 லட்சத்தை இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கும், ரூ.15 லட்சத்தை தமிழ்நாடு சமரச தீா்வு மையத்துக்கும் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழக்கை ரத்து செய்தாா். மேலும், இந்த வழக்கில் மோசடி எதுவும் நடைபெறவில்லை என்றும், அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest