
தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும், ‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்’ என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் வாசலில் 10 நாட்களாக இரவும் பகலுமாக போராடி வருகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,

போராட்டக் களத்திலுள்ள தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தவர் “இந்த நகரம் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு காரணம் மக்கள்நலப் பணியாளர்கள் தான். மழை பெய்யும் போது கூட அவர்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள். அரசாங்கம் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய அவர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களின் கோரிக்கைக்கு நாங்கள் துணை நிற்போம். முதல்வர் ஏன் இதுவரை வந்து சந்திக்கவில்லை என்ற கேள்வி ஆளும் தரப்பில் தான் கேட்க வேண்டும். அமைச்சர்கள் வந்து பேசுகிறார்கள் தவிர அவர்களை கோரிக்கை நிறைவேற்றவில்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் பிரச்னைக்கு அரசு முடிவை ஏற்படுத்த வேண்டும்.” என்றார்.
விஜயகாந்த் படத்தை எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்ற தே.மு.தி.க-வின் அறிவிப்பு குறித்த கேள்விக்கு, “அரசியலில் எங்களுக்கு மானசீக குரு கேப்டன்தான். அவரது படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், சுவரொட்டிகளிலும் சமூக வலைதளங்களில் கேப்டன் படத்தைப் பயன்படுத்துவதைத்தான் நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறோம்” என விளக்கமளித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் இணைந்து பிரேமலதா விஜயகாந்த்தின் படத்தை வெளியிட்டிருந்தார் தே.மு.தி.க பொருளாளர் சுதீஷ். அதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, ” ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல, ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கலைஞர், ஒரு கேப்டன் தான். அவர்களின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அதேபோல் ஒரு பிரேமலதா விஜயகாந்த் தான். என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது” என அடித்துச் சொன்னார்.
ஓரிரு மாதங்கள் முன்புவரை அ.தி.மு.க கூட்டணியிலிருந்த தே.மு.தி.க, ராஜ்ய சபா சீட் தராத வருத்தத்தில் கூட்டணியை முறித்துக் கொண்டது. தி.மு.க-வுடம் தொகுதி பேரம்வரை பேசப்படுவதாகச் சொல்லப்படும் சூழலில், ஜெயலலிதா படத்துடன் இணைந்து எடிட் செய்யப்பட்ட படத்தை வெளியிடுகிறர்கள். இதன்மூலம் தே.மு.தி.க எந்த பக்கம் சாயும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.