
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டத்தை திமுக அரசு மாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ஒரு தனியார் விடுதியில் கடலூர் விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர், பொதுநலச் சங்கத்தினரையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளையும் பெற்றுக் கொண்டார்.
அவர்களுடன் பேசுகையில், என்னுடைய ஆட்சியில் நான்காண்டு காலத்தில் புயல், வறட்சி, கரோனா என 3 இக்கட்டான சூழ்நிலைகள் அமைந்தன. இருப்பினும், அத்தகைய சூழ்நிலைகளை சிறப்பாக சமாளித்து, அரசின் வருவாய் மூலம் சிறப்பான ஆட்சி மேற்கொள்ளப்பட்டது. என்னுடைய ஆட்சியில் பிரச்னைகளை சந்தித்தபோதிலும், மக்கள் குறையில்லாமல் வாழ்ந்தனர்.
அதிமுக ஆட்சியில் ஆட்சியர் அலுவலகத்துக்கான இடத்தை பேருந்து நிலையத்துக்காக தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இப்போது நகரின் மையப்பகுதியில் இருக்கவேண்டிய பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது.
மக்கள் விரும்பும் இடத்தைவிட்டு, மாற்றிடத்தில் பேருந்து நிலையம் அமைப்பது கண்டிக்கத்தக்கது. மக்களுக்காக மட்டுமே ஆட்சியும் ஆட்சியாளர்களும் இருக்கவேண்டுமே தவிர, ஆட்சியாளர்களுக்காக மக்கள் இருக்கக் கூடாது.
அதிமுகவின் திட்டம் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்தத் திட்டத்தை ஸ்டாலின் அரசு மாற்றுவது சரியானதல்ல. இதனால், வருகிற செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 15) பேருந்து நிலையம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
விவசாயம் செழித்தால்தான், அனைத்து தொழிலும் செழிக்கும். அடிப்படையில் நான் ஒரு விவசாயி. இன்றும் நான் விவசாயம் செய்து வருகிறேன். கனமழை வெள்ளத்தால் கடலூரில் வேளாண் தொழில் பாதிக்கப்பட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
கரோனா காலகட்டத்தில் அரசுக்கு எந்தவிதமான வருமானம் இல்லாதபோதிலும், ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது.
என்னுடைய ஆட்சியிலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் போதைப் பொருள்கள். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே மாநிலம் வளர்ச்சியடையும்.
அனைத்து தரப்பிலான மக்களும் திருப்தியடையும் ஆட்சியை வழங்குவதுதான் எங்கள் நோக்கம். வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?