1001490746

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை கதவுகள் ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை கோயில் முன்னாள் அதிகாரிகள், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது  தங்கம் கொள்ளைக்கு எதிராக சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசை கிண்டலடித்து ஒரு பாடல் வெளியானது. பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை… என்ற பிரபல ஐயப்ப சுவாமி பாடல் மெட்டுக்கு ஏற்ப பாடப்பட்ட அந்த பாடலில், உன்னிகிருஷ்ணன் போற்றியை சபரிமலைக்கு அனுப்பி தங்க தகடுகளை கொள்ளையடித்தவர்கள் சகாவுகள் என்பதை குறிக்கும் வகையில் அந்த பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன. அந்த பாடலில், ‘போற்றியே கேற்றியே சொர்ணம் செம்பாய் மாற்றியே

சொர்ணப் பாளிகள் மாற்றியே சாஸ்த்தாவின் தனம் ஊற்றியே

ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா…’ என  பாடல் வரிகளில் இடம்பெற்றிருந்தன.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகும் அந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோழிக்கோடு நாதாபுரத்தைச் சேர்ந்த குஞ்ஞப்துல்லா என்பவர் எழுதிய அந்த பாடலை டேனிஷ் கூட்டிலங்காடி என்ற மேடைப்பாடகர் பாடலாகப் பாடி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினார். அந்த பாடலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க-வும் கேரள உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியதால் மாநிலம் முழுவதும் ஒலித்தது. இதற்கிடையே, சபரிமலையில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி டீன் குரியகோஸ் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கேரள மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது ‘ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா’ என்ற பாடலை பாடி கவனம் ஈர்த்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பாடல் பாடி போராடிய காங்கிரஸ் எம்.பி-க்கள்

இந்த நிலையில் அந்த பாடலை தடைச் செய்ய வேண்டும் என சபரிமலை திருவாபரண பாதை கமிட்டி பொதுச்செயலாளர் பிரசாந்த் குழிக்கால என்பவர் கேரள போலீஸ் டி.ஜி.பி-க்கு புகார் அளித்துள்ளார். அவரது மனுவில் கூறுகையில், “பக்தி பாடலை திரித்து தவறாக பயன்படுத்துகிறார்கள். அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமியின் பெயரை பயன்படுத்துவது பக்தர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த பாடல் அய்யப்ப சுவாமியை நிந்தனை செய்யும் விதமாகவும், அவமதிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. எனவே அந்த பாடலை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest