
‘அரபு நேட்டோ கூட்டமைப்பு’ உருவாக்கப்பட வேண்டுமென முஸ்லிம் நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. கத்தார் தலைநகர் தோஹாவில் திங்கள்கிழமை(செப். 15) அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் பங்கற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எகிப்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள ‘அரபு நேட்டோ’ என்னும் பெயர், அரபு – முஸ்லிம் நாடுகளின் ராணுவத்தை ஒருங்கிணைத்து ஒரே குழுவாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே கடந்த 2015-இல், எகிப்து அரசால் முன்மொழியப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அரபு நாடுகளின் ராணுவ கூட்டமைப்பு, கடந்த வாரம் கத்தாரில் இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு பாகிஸ்தான், துருக்கி, இராக் உள்ளிட்ட ராணுவ பலம் வாய்ந்த முக்கிய முஸ்லிம் நாடுகள் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளன.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ‘அரபு நேட்டோவின்’ தலைமையிடம் செயல்படலாம் என்றும், இப்படைகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை அரபு லீக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 22 உறுப்பினர் நாடுகளும் சுழர்சி முறையில் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் எகிப்து தரப்பிலிருந்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.