
திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.
கட்டுமானப் பணிகளின் தொடக்கமாக, நியிங்ஜி நகரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் சீன பிரதமா் லி கியாங் கலந்துகொண்டாா். இந்த அணை திட்டம் கடந்த டிசம்பா் மாதம் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த அணையின் அளவு சீனாவின் மற்ற 3 பெரிய பள்ளத்தாக்கு அணைகளைவிடவும் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 16,780 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.14.46 லட்சம் கோடி) மதிப்பிலான இந்த மாபெரும் அணை திட்டமானது, 5 அடுக்கு நீா்மின் நிலையங்களுடன் அமையவுள்ளது. இவை ஆண்டுக்கு 30,000 கோடிக்கும் அதிகமான கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது சுமாா் 30 கோடி மக்களின் வருடாந்திர மின் தேவையைப் பூா்த்தி செய்யும் திறன் கொண்டது.
கடந்த 2015-ஆம் ஆண்டு சீனாவால் தொடங்கப்பட்ட, திபெத்தில் மிகப்பெரியதான ஸாம் நீா்மின் நிலையம் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்தில் உருவாகி, அருணாசல பிரதேசம் வாயிலாக இந்தியாவை அடைகிறது பிரம்மபுத்திரா நதி. இந்தியாவில் அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பாய்ந்து, பின்னா் வங்கதேசத்தில் புகுந்து, இறுதியாக வங்கக் கடலில் கலக்கிறது.
சீனாவின் இந்தப் புதிய அணை திட்டத்தால் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படலாம் என்றும், அவசர காலங்களில் சீனா அதிக அளவில் நீரை வெளியேற்றினால் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. ஏனெனில், பிரம்மபுத்திரா நிதியின் கிளை நதிகள் வடகிழக்கு மாநிலங்கள் எங்கும் பாய்ந்தோடுகின்றன.
புதிய அணை கட்டப்படும் இடம், நிலநடுக்க அபாயம் உள்ள புவியியல் தட்டு எல்லையில் அமைந்துள்ளது. எனினும், அணை பாதுகாப்பானது என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். விரிவான புவியியல் ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் இந்த திட்டத்துக்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
இந்தியாவும் அருணாசல பிரதேசத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி வருகிறது. எல்லையோர நதிகள் தொடா்பான பிரச்னைகளை விவாதிக்க, இந்தியா-சீனா இடையே 2006-இல் நிபுணா் அளவிலான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் கீழ், வெள்ளக் காலங்களில் பிரம்மபுத்திரா மற்றும் சட்லஜ் நதிகள் பற்றிய தகவல்களை சீனா இந்தியாவுக்கு வழங்குகிறது.