
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருபவர். பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட வழக்குகளில் ஆஜரானவர்.

இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன்- ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் ஆஜராகி வந்த வாஞ்சிநாதனுக்கு பதிலாக வேறொரு வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கு விசாரணையில் வாஞ்சிநாதன் நேரில் ஆஜாராக வேண்டுமென்று நீதிபதிகள் சமீபத்தில் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி பிற்பகல் வாஞ்சிநாதன் ஆஜரானபோது, “உங்களுடைய நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும், சாதிய ரீதியாக தீர்ப்புகள் வழஙகுவதாகவும் என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறீர்கள். இதுகுறித்து தங்களின் தற்போதைய நிலை என்னவென்று கூறுங்கள்?” நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்ப, பதில் அளித்த வாஞ்சிநாதன், “எந்த வழக்கில் அப்படி கூறினேன் என்று குறிப்பிட்டு கூறினால் அது குறித்து தெரிவிக்கிறேன்” என்றார்.

அதைத் தொடர்ந்து “வருகின்ற ஜூலை 28 ஆம் மீண்டும் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக்கூட்டத்தில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், பி.யூ.சி.எல் நிர்வாகி இரா முரளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அரிபரந்தாமன், “வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது ஜி ஆர் .சுவாமிநாதன் அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இது தனிப்பட்ட வாஞ்சிநாதனுக்கான பிரச்னை அல்ல. இது ஒட்டுமொத்த சாதாரண மனிதருக்குமான பிரச்னை. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய புகார் மனு, யாரோ ஒருவர் மூலமாக சமூக வலைதளத்தில் வெளியானால் அதற்கு புகார் கொடுத்த நபர் எப்படி பொறுப்பாக முடியும்? ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். ஜி ஆர்.சுவாமிநாதனை பற்றிய ஒரு புகார் மனுவிற்கான வழக்கில் அவரே அமர்வு நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது? பாலியல் தொடர்பான வழக்கில் சிக்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குகாய், அதற்குரிய வழக்கு ஒன்றில் அவரே அமர்வு நீதிபதியாக இருந்தபோது நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. அது போன்ற தவறை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் செய்யக்கூடாது. அவ்வாறு அவர் செய்தால் தலைமை நீதிபதி தலையீடு செய்து இதனைத் தடுக்கவேண்டும். இந்த அநீதிக்கு துணை போகக்கூடாது. திங்களன்று வரக்கூடிய இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி சுவாமிநாதனே கைவிட வேண்டும் அல்லது தலைமை நீதிபதி தலையிட்டு இதனை ரத்து செய்யவேண்டும் இதுதான் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம். நீதிமன்ற நடவடிக்கைகளில் பல்வேறு விஷயம் சார்ந்து முன்னோடியான போராட்டங்களை மேற்கொண்டது தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் தான். அதேபோன்று நீதித்துறையில் சமூக நீதியை வலியுறுத்தி போராடியதும் தமிழ்நாடுதான். குறிப்பிட்ட விஷயத்தில் வாஞ்சிநாதன் பின் வாங்கினால்கூட வழக்கறிஞர்கள் இதனை விடுவதாக இல்லை” என்றார்.