
நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிக்காமல், புது உத்தியை கையாளுகின்றனர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை காலை கூடியுள்ளது. முதல் நாளிலேயே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பகல் 12 மணிக்கு அவை தொடங்கியவுடன் பாஜக மூத்த எம்பி ஜக்தம்பிகா பால், மக்களவைக்கு தலைமைத் தாங்கினார்.
அப்போது, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு எழுந்து நின்றபோது, அவர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
ஆனால், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அவையில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து மக்களவையில் அமளி ஏற்பட்டதால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசியதாவது:
”பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் அரசு தரப்பினர் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் பேசுவதற்கு அனுமதி இல்லை. நான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், பேசுவது எனது உரிமை, ஆனால் பேச அனுமதிக்க மறுக்கிறார்கள்.
இது புது வகையான உத்தியாக இருக்கிறது. பிரதமர் அவையைவிட்டு வெளியேறிவிட்டார். அவர்கள் அனுமதித்தால் விவாதத்தை தொடங்கியிருக்க முடியும். விதிமுறை என்னவென்றால், அரசு தரப்பினர் பேச அனுமதிக்கப்படும் பட்சத்தில், எங்களுக்கும் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதைதான் நாங்கள் எடுத்துரைத்தோம், ஆனால், எங்களை அனுமதிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கூறியதாவது, “விவாதத்துக்கு அரசு தயார் என்றால், எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும். அவர் பேச எழுந்தார், ஆகையால், அவரை பேச அனுமதித்திருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.