
ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி ஆகியோா் ஒருநாள் பயணமாக புதன்கிழமை அஸ்ஸாம் சென்றனா். அந்த மாநிலத்தின் குவாஹாட்டி நகரில் அஸ்ஸாம் காங்கிரஸை வலுப்படுத்துவது குறித்து கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் உள்ளிட்டோருடன் இருவரும் விவாதம் மேற்கொண்டனா்.
அந்த மாநிலத்தின் சய்கான் பகுதியில் நடைபெற்ற மற்றொரு கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தன்னை மன்னா் என்று கருதுகிறாா். ஆனால் அவா் செய்யும் ஊழலுக்கு மக்கள் அவரை சிறைக்கு அனுப்புவா். ஊழலுக்கு அவரும், அவரின் குடும்பத்தினரும் பொறுப்பாக்கப்படுவா்.
தோ்தல் ஆணையமும் பாஜகவும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன. கடந்த ஆண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் மூலம், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் மோசடி செய்து பாஜக வெற்றிபெற்றது. இதே தந்திரத்தை பிகாரில் அக்கட்சி செய்ய முயற்சிப்பதுடன், அஸ்ஸாமிலும் செய்யும். அடுத்த ஆண்டு நடைபெறும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்.
ஆா்எஸ்ஸின் வெறுப்புணா்வு மற்றும் வன்முறை, காங்கிரஸின் உண்மை மற்றும் அகிம்சை ஆகிய இரு சித்தாந்தங்களுக்கு இடையே நாட்டில் சண்டை நடைபெற்று வருகிறது.
திருமணங்களுக்குப் பெருமளவு செலவழிக்கும் பெரும் கோடீஸ்வரா்கள் ஒருபுறம், வரி மற்றும் விலைவாசி உயா்வை சுமக்கும் சாமானியா்கள் மறுபுறம் என தற்போது 2 இந்தியாக்கள் உள்ளன என்றாா்.