
ஆசியாவிலேயே மிக வயதான யானை என்ற பெருமையுடன் வலம் வந்துகொண்டிருந்த வத்சலா யானை மரணமடைந்தது. மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளின் தனிக்கவனம் பெற்று வந்த யானை வத்சலாவுக்கு வயது 100க்கும் மேல் ஆகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா புலிகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த வத்சலா யானை, செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்தது.
இந்த பெண் யானையானது, கேரள மாநிலத்திலிருந்து நர்மதாபுரம் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட வத்சலா யானை, பிறகு பன்னா புலிகள் சரணாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆசியாவிலேயே மிக அதிக வயதுடைய யானையாக அடையாளம் காணப்பட்டுவந்த யானை, அப்பகுதியில் உள்ள மற்ற யானைகளை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பண்போடு இருந்து வந்தது. இதற்கான இறுதிச் சடங்குகளை, பூங்கா நீர்வாகிகளும் ஊழியர்களும் நடத்தியிருக்கிறார்கள்.
வத்சலாவின் முன்னங்கால் நகங்கள் உடைந்து காயமேற்பட்டிருந்த நிலையில் சில நாள்கள் நடக்க முடியாமல் ஓய்வெடுத்து வந்தது. மனிதர்களைப் போலவே, வயதான நிலையில், வத்சலா கண் பார்வை மங்கி அவதிப்பட்டு வந்தது. நாள்தோறும் அதன் பணிகளை மேற்கொள்ள பூங்கா ஊழியர்கள்தான் உதவி வந்துள்ளனர்.
வயது முதுமை காரணமாக, வத்சலா யானைக்கு சிறப்பு உணவுகளையும் தொடர்ந்து கால்நடை மருத்துவரின் தனிக் கவனமும் செலுத்தப்பட்டு வந்த நிலையிலும், வத்சலாவின் உடல்நிலை மோசமடைந்து, நேற்று பிற்பகலில் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தங்களது மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வந்த வத்சலா யானை மரணமடைந்த செய்தி அறிந்து மாநில மக்கள் வருத்தமடைந்தனர். இது குறித்து இரங்கல் தெரிவித்திருக்கும் மத்தியப் பிரதேச முதல்வர், எங்கள் வனத்தை மிக அமைதியான முறையில் பாதுகாத்து வந்தது, பல தலைமுறையின் தோழியாக, மத்திய பிரதேச உணர்வின் அடையாளமாக விளங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.