
நாகப் பாம்பைக் கடித்து அதன் ஒருபகுதியை விழுங்கிய சிறுவன் உயிர்பிழைத்த அதிசயம் பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
சம்பாரண் மாவட்டத்தின் மோச்சி பங்கட்வா என்ற கிராமத்தில் கடந்த விழாயன் அன்று இந்த ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவிந்த் குமார் என்ற ஒரு வயது சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அவரது தாய் அருகில் வேலை செய்து கொண்டிந்தார். அப்போது அந்த வழியாக வந்த நாகப்பாம்பினை பிடித்து குழந்தை பற்களால் கடித்துள்ளது. அதில் அந்த பாம்பு உயிரிழந்தது. இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரிமடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து குழந்தை சிறிது நேரத்திலேயே மயக்கநிலையை அடைந்தது. குடும்பத்தினர் தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்றனர். கோவிந்துக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை உயிர்பிழைத்துள்ளது. இந்தச் செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது. இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நிகழ்வதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறியதென்ன?
கோவிந்தைப் பரிசோதித்த அரசு மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் குமார் சௌரவ் கூறுகையில், மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துவரும்போது வாயைச் சுற்றி வீக்கம் இருந்தது. குழந்தை பாம்பைக் கடித்ததோடு மட்டுமல்லாமல் அதன் ஒரு பகுதியை விழுங்கியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
குழந்தை உயிர்பிழைத்தற்கான காரணங்களையும், மருத்துவ அம்சங்களையும் மருத்துவர் விளக்கினார். பாம்பு ஒருவரைக் கடிக்கும்போது விஷம் ரத்த ஓட்டத்தில் கலந்து, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. இது கடுமையான சிக்கல்களையோ மரணத்தையோ ஏற்படுத்தும். இருப்பினும் குழந்தை கோவிந்தின் விஷயத்தில் விஷம் செரிமானப் பாதை வழியாகச் சென்றது. மனித செரிமான அமைப்பானது சில நேரங்களில் விஷத்தை முறித்து சமநிலையாக்கி, தீங்கு விளைவிக்காமல் தடுக்கும் திறன் கொண்டது.
உணவுக் குழாயில் ஏதேனும் புண்கள் அல்லது உள் ரத்தப்போக்கு இருந்திருந்தால் விளைவு வேறுபட்டிருக்கலாம், ஆனால் இந்த விஷயத்தில் அத்தகைய பிரச்னைகள் எதுவும் இல்லை. குழந்தை அதிர்ஷ்டசாலி என்று அவர் கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 80,000 முதல் 1,30,000 பேர் வரை பாம்புக் கடியால் இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 58,000 இறப்புகள் பதிவாகின்றன.
பிகாரில் 2023 ஏப்ரல் முதல் மார்ச் 2024 வரை 934 பேர் பாம்புக் கடியால் இறந்ததாக அரசு தரவுகள் காட்டுகின்றன. அதே காலகட்டத்தில், 17,800-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் பாம்புக்கடிக்குச் சிகிச்சை பெற்றனர்.
மேலும் பாரம்பரிய மருத்துவர்களை நம்பியிருப்பதால் பல வழக்குகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது. பாம்புக்கடியால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகள் பிகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற கிராமப்புற மாநிலங்களில் நிகழ்கின்றன.
கோவிந்தின் வழக்கு அரிதாக இருக்கலாம், ஆனால் நாட்டின் பல பகுதிகளில் பாம்புக்கடி எவ்வளவு பொதுவானது மற்றும் ஆபத்தானது என்பதை இது விளக்குகிறது.