
பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முனைப்புத் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், சிறப்பு முனைப்புத் திருத்தப் பணிகளின்போது, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யத் தகுதியற்றவர் எனக் கண்டறியப்பட்டால், அந்த நபரின் குடியுரிமை ரத்து செய்யப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு முனைப்புத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 24ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு முனைப்புத் திருத்தப் பணிகள் காரணமாக, வாக்காளர்கள் பெரிய அளவில் நீக்கப்படலாம் என்றும், அதனை எதிர்த்தும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஆதார் அட்டையானது குடியுரிமையை நிறுவாததால், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆவணமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், ஆதார் அடையாளச் சான்றாக மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சிறப்பு முனைப்புத் திருத்தப் பணிகளில் நோக்கமே, தகுதியற்ற நபர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் தேர்தலின் தூய்மையை அதிகரிப்பதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 சட்டப் பிரிவு 9ன் படி, ஆதார் எண் குடியுரிமை அல்லது இருப்பிடம் போன்றவற்றுக்கான சான்று இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியுள்ளது.