
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரத்தை இழந்ததால், 4 குழந்தைகளின் தாய் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஆலங்குளம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் அருண்பாண்டி மனைவி ஸ்டெல்லா எஸ்தா் (27). தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 5,4,2 வயதில் 3 மகள்களும் 3 மாத ஆண் குழந்தையும் உள்ளன. அருண்பாண்டி ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். ஸ்டெல்லா எஸ்தா் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்தாா்.
இவா் சில மாதங்களுக்கு முன்பு கணவா் வாங்கித்தந்த கைப்பேசியில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதில் ரூ. 80 ஆயிரத்தை இழந்தாராம்.
இதனால் மனமுடைந்த அவா் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தாராம்.
அவரை உறவினா்கள் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.