
ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று(ஜூலை 29) நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர்கள் என்று மார் தட்டிக் கொள்பவர்கள் வலியை உணருகிறார்கள். உலக நாடுகள் முன்னால் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக நிலைநிறுத்தப்பட்டதால், இந்த வலி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் சில தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பேசக்கூட அக்கட்சி தலைமையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.
பாகிஸ்தான் அணைகள் கட்ட நேரு நிதி அளித்துள்ளார். அந்நட்டுக்கு தண்ணீரும் பகிர்ந்தளித்தார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நேரு இழைத்த தவறால் நிகழ்ந்தது. விவசாயிகளைப் பற்றி அவர் கண்டுகொள்ளவில்லை. அடுத்தடுத்த ஆட்சியிலும் அந்த தவறு சரிசெய்யப்படவில்லை.
ஆனால் நாங்களோ, ‘ரத்தமும், தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது’ என்பதை தெளிவாக எடுத்துரைத்துவிட்டோம். தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக, வாக்கு வங்கிக்காக.. நாட்டின் பாதுகாப்பை தியாகம் செய்த கட்சி காங்கிரஸ்!
தில்லியில் பட்லா ஹௌஸ் தாக்குதல் நடத்தப்பட்டபோது, காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்காக கண்ணீர் வடித்தார். வாக்கு அரசியலுக்காக இதனால் அவர்கள் ஆதாயம் தேடிக் கொண்டனர்.
2001-இல் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்தபோது, அஃப்சல் குருவுக்கு காங்கிரஸ் தலைவர் ஒருவர் நற்சான்றிதழ் கொடுத்தார். நவம்பர் 26, 2011-இல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல்களில், பாகிஸ்தான் பயங்கரவாதியொருவர் உயிருடன் பிடிபட்டார். அந்த நபர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்தான் என்று பாகிஸ்தானும் ஒட்டுமொத்த உலகமும் ஏற்றுக்கொண்டது. ஆனால், அந்த தருணத்தில் வாக்கு அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி ’காவி பயங்கரவாதிகள்’ என்ற பிரசாரத்தை முன்னிலைப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். பயங்கரவாத சக்திகளை எதிர்க்க அவர்கள் ஒற்றுமையுடன் நிற்கவில்லை.
அமெரிக்க உயரதிகாரிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் அப்போது எழுதிய கடிதத்தில், ‘இந்த ஹிந்து கும்பல் ’லஷ்கர் இ தய்பாவை’ விட ஆபத்தானது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆதிக்கத்துக்கு அடிபணிந்து பாகிஸ்தானுக்கு சான்றிதழ் கொடுக்கும் வழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர்களிடம் இந்த தருணத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஆபரேஷன் சிந்தூர் தொடரும், இதன்மூலம் பாகிஸ்தானுக்கு ஒன்று தெளிவாக சொல்லப்படுகிறது – ‘பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்தும்வரை இந்தியா தொடர்ந்து செயல்படும், ஆபரேஷன் சிந்தூர் தொடரும்’ என்று மோடி பேசியுள்ளார்.