
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றுமுதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இன்று காலை மக்களவை கூடியவுடன் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், மக்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது.
இதுகுறித்து விவாதிக்க பின்னர் நேரம் ஒதுக்கப்படும் என்று நோட்டீஸை ஏற்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மறுத்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முதலில், மக்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய நிலையில், உடனடி விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மக்களவை அலுவல்கள் முடங்கிய நிலையில், பிற்பகல் 2 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.