
மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்கு மாநிலங்களவை பாஜக குழுத் தலைவர் ஜெ.பி. நட்டா பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கியது. ஆகஸ்ட் 21 வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் முதல் நாளே எழுப்பப்பட்டுள்ளது.
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், டிரம்ப்பின் கருத்து குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், மாநிலங்களவை மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
”விதி எண் 267 இன் கீழ் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதிக்க நான் நோட்டீஸ் அளித்துள்ளேன்.
இன்றுவரை பயங்கரவாதிகளைப் பிடிக்கவும் இல்லை கொல்லவும் இல்லை. அனைத்துக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.
என்ன நடந்தது என்பதை அரசு எங்களுக்கு விளக்க வேண்டும். ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் உளவுத்துறை தோல்வி என அறிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரால்தான் மோதல் நிறுத்தப்பட்டதாக 24 முறை கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜெ.பி. நட்டா, ”மோடி தலைமையிலான அரசு இதுபோன்ற மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு தலைப்பின் கீழும் பதிலளிப்போம்” என பதிலளித்துள்ளார்.