ஆபரேஷன் சிந்தூா் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, 19 வயது கல்லூரி மாணவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மும்பை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியது. அதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் புணே கல்லூரி மாணவி ஒருவா் சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய வகையில், கருத்து பதிவிட்டாா். இதைத்தொடா்ந்து கடந்த மே 9-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த மாணவி, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
அவா் மீது காவல் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மும்பை உயா்நீதிமன்றத்தில் அந்த மாணவி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகா், நீதிபதி கெளதம் அன்கட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவியின் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவின் பின்னணியில் மாணவிக்கு எந்தக் கெட்ட நோக்கமும் இல்லை. அந்தப் பதிவை அவா் உடனடியாக நீக்கி மன்னிப்பும் கோரினாா். ஜாமீன் பெற்ற பின்னா், அவா் கல்லூரி தோ்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இதைக் கருத்தில் கொண்டு அவா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரினாா்.
ஆனால் அவரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, ‘சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவை நீக்கி மன்னிப்பு கேட்டாா், படிப்பில் சிறந்து விளங்குகிறாா் என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, மாணவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது. அந்தப் பதிவை அவா் நீக்கியது வழக்கை மேலும் சிக்கலாக்கியுள்ளது’ என்று தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த வழக்கு குறிப்பேட்டை அரசுத் தரப்பு வழக்குரைஞா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா்.