ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழாது எனக் கூறி இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
2021, ஆகஸ்ட் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல தடை உள்பட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை, 330 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், 58.6 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்கள் எனப் பல்வேறு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. இதுதவிர, ஐ.நா.வுடன் இணைந்து பல்வேறு உதவிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் ஆப்கானிஸ்தான் சூழல் குறித்த வரைவுத் தீா்மானத்தை ஜொ்மனி அறிமுகப்படுத்தியது. அதைத் தொடா்ந்து, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 116 நாடுகளும் எதிராக 2 நாடுகளும் வாக்களித்தன.
இந்தியா உள்பட 12 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வாக்கெடுப்பை புறக்கணித்தது குறித்து ஐ.நா.வுக்கான இந்தியா தூதா் பா்வதனேனி ஹரீஷ் கூறியதாவது: பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு தற்போது ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை சீா்படுத்த வேண்டுமெனில் நல்ல கொள்கைகளை ஊக்குவித்து கடுமையான கட்டுப்பாடுகளை நீக்குவதே சரியானதாக இருக்கும்.
மற்ற நாடுகளில் போருக்குப் பிந்தைய சூழலில் ஐ.நா.வும் சா்வதேச நாடுகளும் சமநிலையான முடிவுகளை எடுத்துள்ளன. அதேபோல் ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத் தளமாகப் பயன்படுத்திவரும் ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகள், அல்-காய்தா, லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகளின் செயல்பாட்டை தடுக்க சா்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் அந்நாட்டு மக்களுக்கு நல்வாழ்வை உறுதிப்படுத்த முடியும். வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் அங்கு மாற்றங்கள் நிகழாது என்றாா்.