
திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.
கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக திங்கள்கிழமை(ஜூலை 21) மரணமடைந்தார்.
அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலக தர்பார் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்கள், மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் இருந்து ஆலப்புழாவின் புன்னப்ராவில் உள்ள அவரது பூர்வீக வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை முற்பகல் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
அச்சுதானந்தனின் உடல் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுங்கிலும் குவிந்தனர்.
இரவு முழுவதும் கடும் மழையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் குவிந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனால், வெறும் 150 கிலோ மீட்டர் தொலைவை கடக்க சுமார் 22 மணிநேரம் ஆகின.
ஆலப்புழாவின் புன்னப்ராவுக்கு இன்று பிற்பகலில் தான் அச்சுதானந்தனின் உடல் வந்தடைந்தது. அவரது வீட்டில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்னும் சற்றுநேரத்தில் புன்னப்ரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் அச்சுதானந்தன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.
கேரள முதல்வர் பினராயில் விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுள்ளனர்.