
இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை பகிர்ந்ததால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அவர் தயாராகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின், இந்த ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும், ஒருநாள் வடிவிலான போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. அந்த தொடரில் விராட் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸி.க்கு எதிரான தொடருக்கு தயாராகிறாரா?
வருகிற அக்டோபரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், விராட் கோலி உதவிப் பயிற்சியாளர் நயீம் அமீனுடன் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் விராட் கோலி கூறியிருப்பதாவது: நான் பயிற்சியில் ஈடுபடுவதற்கு உதவியதற்கு நன்றி. உங்களை பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாடுவார் எனத் தெரிகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி அடிலெய்டிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 25 ஆம் தேதி சிட்னியிலும் நடைபெறவுள்ளது.
இதுவரை இந்திய அணிக்காக 302 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 14, 181 ரன்கள் குவித்துள்ளார். அதில் 51 சதங்கள், 74 அரைசதங்கள் அடங்கும். அனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் விராட் கோலி மொத்தமாக 27, 599 ரன்கள் குவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தொடர்ந்து விளையாடும் பட்சத்தில், அந்த வடிவிலான போட்டிகளில் அவர் 15,000 ரன்கள் குவித்து சாதனை படைக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல, சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ஆயிரம் ரன்கள் குவித்து சாதனை படைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இதையும் படிக்க: தொடர்ச்சியாக ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பார்த்திவ் படேல் பாராட்டு!