
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் அண்டை மாவட்டமாக, கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் தேக்கடி, மூணாறு, வாகமண் என பல சுற்றுலா தலங்களுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
தற்போது கேரளத்தில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில், இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து, தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இடுக்கி மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
மழைப்பொழிவு குறைவு :
முல்லைப்பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால் நீா்வரத்து வினாடிக்கு 503 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீா், விவசாயத்துக்கு வினாடிக்கு 1,867 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா் மட்டம் 130.45 அடியாக உள்ளது. தேக்கடியில் 5.6 மி.மீ., பெரியாறு அணையில் 7.4 மி.மீ. மழை பதிவானது.