farmer_sucide

ஹைதராபாதில் இணையவழியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கிய ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

76 வயதாகும் அந்த பெண் மருத்துவரை, கடந்த 5-ஆம் தேதி தொடா்புகொண்ட அந்த கும்பல், சா்வதேச ஆள் கடத்தல் கும்பல் தொடா்பான வழக்கில் அவரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, போலியான விசாரணை அறிக்கைகள், நீதிமன்றம் உத்தரவுகளைக் காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளது.

மேலும், இணையவழி கைது என்று தொடா்ந்து மூன்று நாள்கள் வேறு நபா்களைத் தொடா்பு கொள்ள விடாமல் செய்துள்ளனா். மொத்தம் ரூ.6.60 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கில் இருந்து மிரட்டி பறித்துள்ளனா். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி அவா் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டாா். அவரது குடும்பத்துக்கு இந்த மிரட்டல் பணம் பறிப்பு தெரியாத நிலையில், அவரது இறுதிச் சடங்கும் முடிந்துவிட்டது.

இந்நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவரின் கைப்பேசியை அவரது மகன் பரிசோதித்தபோது, அவரை ஒரு கும்பல் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. அவா் இறந்ததுகூட தெரியாமல் தொடா்ந்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டி குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளனா்.

இதையடுத்து, அந்த பணம் பறிக்கும் கும்பல் பெண் மருத்துவரிடம் பேசிய உரையாடல் பதிவு, வங்கிப் பணப்பரிவா்த்தனை விவரங்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் அவரின் மகன் காவல் துறையில் புகாா் அளித்தாா்.

காவல் துறை உள்பட எந்த விசாரணை அமைப்பும் இணைய வழியில் கைது நடவடிக்கையோ, விசாரணையோ மேற்கொள்ளாது. மோசடி நபா்களே இதுபோன்று ஏமாற்றி வருகிறாா்கள் என பல்வேறு விழிப்புணா்வு விளம்பரங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. எனினும், ஓய்வு பெற்ற பெண் மருத்துவா் ஒருவரே இதுபோன்ற மோசடியில் சிக்கி பணத்தை பறிகொடுத்ததுடன், மனஉளைச்சலால் உயிரையும் இழந்தது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest