
தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் கேஷவ் மஹாராஜ் தலைமையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 328 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
அதைத்தொடர்ந்து, வியான் முல்டர் தலைமையில் நேற்று இரண்டாவது டெஸ்டில் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா.
முதல்நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 465 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்கா. கேப்டன் வியான் முல்டர் 264 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றுகொண்டிருந்தார்.

இன்று தொடங்கிய இரண்டாம் நாளில் மதிய உணவு இடைவேளைக்கு முன் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் குவித்தது.
முல்டர் முச்சதம் கடந்து 334 பந்துகளில் 49 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 367 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.
மதிய உணவு இடைவேளை முடிந்து இன்னிங்ஸ் தொடங்கியதும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 400 ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற லாராவின் சாதனையை முல்டர் எளிதாக முறியடிப்பர் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் முல்டர். எல்லோருக்கும் இது சற்று அதிர்ச்சியைக் கொடுத்தது என்பது மிகையல்ல
பின்னர், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே 170 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகி ஃபாலோ ஆன் ஆனது.
அதனால், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 51 ரன்கள் குவித்தது.
"Let the legends keep the really big scores." ❤️
Wiaan Mulder speaks to Shaun Pollock after his historic knock #ZIMvSA | #SSCricket pic.twitter.com/VqySlzOzHY
— SuperSport (@SuperSportTV) July 7, 2025
ஆட்ட நேர முடிவுக்குப் பிறகு 400 ரன் சாதனையை எளிதில் முறியடிக்கும் வாய்ப்பு இருந்தும் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஏன் என்பது குறித்து பேசிய முல்டர், “முதலில், எங்கள் அணிக்கு அந்த ரன் போதுமானதாக இருந்தது. எனவே, நாங்கள் பந்து வீச வேண்டும் என்று நினைத்தேன்.
இரண்டாவது, பிரையன் லாரா ஒரு ஜாம்பவான். அத்தகைய அந்தஸ்திலுள்ள ஒருவர், இந்தச் சாதனையைத் தக்கவைக்கத் தகுதியானவர்.
இதேபோன்று மீண்டும் எனக்கொரு வாய்ப்பு கிடைத்தால், அப்போதும் இதையேதான் செய்வேன்.
டிக்ளேர் செய்வது பற்றி சுக்ரி கான்ராட்டிடம் (தென்னாப்பிரிக்கா தலைமைப் பயிற்சியாளர்) பேசினேன், அவரும் இதைத்தான் உணர்ந்தார். எனவே, ஜாம்பவான் லாரா இதைத் தக்கவைக்கத் தகுதியானவர்” என்று கூறியிருக்கிறார்.