
கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உள் விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள் என நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தில்லியில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின்போது எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது, மேலும் அவரது வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் உள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. விசாரணையில் நீதிபதி வீட்டில் பணம் இருந்தது உறுதியானது. இதனிடையே நீதிபதி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய முக்கிய எதிா்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதற்கான தீா்மானத்தை மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில் பதவி நீக்கத்துக்கு எதிராக இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாசி, ‘பதவி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றால் உள் விசாரணை குழு மேற்கொண்ட விசாரணையில் நீங்கள் ஏன் ஆஜரானீர்கள்? இப்போது அதை எதிர்ப்பது ஏன்? விசாரணை அறிக்கை எல்லாம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதுவரை ஏன் எதிர்க்கவில்லை? விசாரணை குறித்தும் தீ விபத்து, பணம் கைப்பற்றப்பட்டது குறித்தும் நீங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை’ என்று கூறினர்.
முன்னதாக நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், ‘அரசியலமைப்பின் 124-வது பிரிவின்படி மட்டுமே ஒரு நீதிபதியை நீக்க முடியும். ஒரு உள் விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீக்க முடியாது’ என்று வாதிட்டார்.
எனினும் நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பு தங்கள் பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.