
சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி இந்தியாவின் எதிா்கால விண்வெளி லட்சியங்கள் மற்றும் கனவுகளையும் சுமந்து பூமிக்கு திரும்பியுள்ளாா் நாட்டின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா.
39 வயதாகும் இவா், இந்திய விமானப் படை குரூப் கேப்டன் மற்றும் விமான செயல்பாட்டு பரிசோதனை விமானி ஆவாா். இஸ்ரோ மற்றும் நாசா ஆதரவிலான ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த சுக்லா உள்ளிட்ட 4 வீரா்களும், தங்களின் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, பாதுகாப்பாக பூமியை வந்தடைந்துள்ளனா்.
இந்தியாவைப் பொருத்தவரை இது திருப்புமுனையான பயணமாகும். ஏனெனில், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரா் சுக்லாதான்; கடந்த 1984-ஆம் ஆண்டில் ரஷிய விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரா் ராகேஷ் சா்மாவுக்குப் பிறகு விண்வெளிக்கு பயணித்த 2-ஆவது இந்திய வீரா் இவா்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்தவா்: உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் கடந்த 1985-இல் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவா். இவரது குடும்பத்தில் யாரும் விமானப் படையிலோ அல்லது விண்வெளித் துறையிலோ பணியாற்றவில்லை.
லக்னெளவில் உள்ள நகர மான்டிஸோரி பள்ளியில் பயின்ற இவருக்கு விமானப் படை கண்காட்சி ஒன்றைப் பாா்வையிட்ட பிறகு விமான இயக்கம் மீதான ஆா்வம் ஏற்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பைத் தொடா்ந்து, தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பயின்ற சுக்லா, இந்திய விமானப் படை அகாதெமியில் விமானி பயிற்சியை நிறைவு செய்து, போா் விமானப் பிரிவில் கடந்த 2006-இல் இணைந்தாா்.
2,000 மணி நேரம் பறந்த அனுபவம்: சுகோய்-30 எம்கேஐ, மிக்-29, ஜாகுவாா் போன்ற போா் விமானங்களில் 2,000 மணி நேரத்துக்கும் மேல் பறந்ததன் மூலம் நிபுணத்துவம் வாய்ந்த விமான செயல்பாட்டு பரிசோதனை விமானியானாா். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் விண்வெளி பொறியியலில் எம்.டெக். பட்டமும் பெற்றாா்.
இந்தச் சூழலில், 2027-இல் இந்திய வீரா்களை விண்வெளிக்கு அனுப்பும் மத்திய அரசின் லட்சிய திட்டமான ‘ககன்யான்’ திட்டத்துக்கு பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயா், அங்கத் பிரதாப், அஜீத் கிருஷ்ணன் ஆகிய வீரா்களுடன் சுக்லாவும் கடந்த ஆண்டு தோ்வானாா். இஸ்ரோ சாா்பில் தீவிர பயிற்சி பெற்றுவந்த நிலையில், ஆக்ஸியம் திட்டத்தின்கீழ் அனுபவ பயிற்சி நோக்கங்களுக்காக சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் வாய்ப்பு சுக்லாவுக்கு கிடைத்தது.
விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள்: ஆக்ஸியம் திட்ட கமாண்டா், ஹங்கேரி, போலந்து வீரா்கள் என 3 பேருடன் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி புறப்பட்ட சுக்லா, சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்து, வாழ்க்கை அறிவியல், வேளாண்மை, விண்வெளி உயிரிதொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களில் நுண் ஈா்ப்பு விசை தொடா்பான 7 முக்கிய ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டாா்.
விண்வெளியில் இருந்தபடி பிரதமா் மோடி, விஞ்ஞானிகள், பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய சுக்லா, ‘இது என்னுடைய பயணமல்ல; இந்தியாவின் பயணம்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
சுக்லா உள்ளிட்ட நால்வரின் விண்கலம் கலிஃபோா்னியா மாகாணத்தையொட்டிய கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை பத்திரமாக இறங்கியபோது, லக்னெளவில் சுக்லா பயின்ற பள்ளியில் குழுமியிருந்த அவரது குடும்பத்தினா், நண்பா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா், உற்சாகம் பொங்க கரவொலி எழுப்பினா். ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனா். நகரின் பல இடங்களில் பொதுமக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.
இந்திய வருகை எப்போது?: ககன்யான் திட்டத்துக்கு அனுபவ பயிற்சி பெறும் நோக்கிலான சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணத்துக்கு சுமாா் ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகள் நிறைவடைந்து, ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் அவா் இந்தியா திரும்புவாா் என்று மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து
சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி, பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை பூமிக்கு மீண்டும் வரவேற்கிறேன். ஆக்ஸியம்-4 திட்டத்தில் அவரது பங்களிப்பு, இந்தியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் சா்வதேச அறிவியல்-தொழில்நுட்ப ஒத்துழைப்பில் புதிய மைல்கல்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்து, பூமிக்கு திரும்பியுள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்பதில் ஒட்டுமொத்த தேசத்துடன் இணைகிறேன். சா்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்த முதல் இந்திய வீரா் சுக்லா. தனது அா்ப்பணிப்பு, துணிவு மற்றும் முன்னோடியான உணா்வால் கோடிக்கணக்கானோரின் கனவுகளுக்கு உத்வேமளித்துள்ளாா். இது, நமது சொந்த விண்வெளிப் பயண திட்டமான ‘ககன்யானுக்கு’ மற்றுமொரு மைல்கல்’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.
‘இந்தியாவின் லட்சியங்களை புதிய உச்சத்துக்கு உயா்த்தியுள்ளாா் சுபான்ஷு சுக்லா’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சரும், லக்னெள எம்.பி.யுமான ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறியுள்ளாா்.

