11092_pti09_11_2025_000151b092514

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய சா்க்கரை- உயிரி எரிபொருள் மாநாட்டில் இது தொடா்பாக அவா் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் உள்நாட்டுத் தேவைக்கு மிகையாக சா்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. பிரேஸிலிலும் சா்க்கரை உற்பத்தி அதிகரித்து வருகிறது. தேவையைவிட கூடுதலாக சா்க்கரை உற்பத்தியாவது பிரச்னைக்குரியது. இப்போது சா்க்கரையின் உற்பத்தி விலையும், சந்தை விலையும் சமமாக உள்ளது. உற்பத்தி தொடா்ந்து அதிகரித்தால் விலை வீழ்ச்சியடையும். இது பெரிய பிரச்னையை உருவாக்கும்.

எனவே, எத்தனால், ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்யவும் கரும்பை பயன்படுத்த வேண்டும். இந்தியா எரிபொருள் உற்பத்தியை சுயசாா்பை அதிகரிக்க இது உதவும்.

என்னை அரசியல் ரீதியாக குற்றஞ்சாட்ட வேண்டும் என்பதற்காகவே பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் ‘இ20’ பெட்ரோலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் இந்த தவறான கருத்தைப் பரப்பினாா்கள்.

எனது இரு மகன்கள் இதில் பயனடைவதாகவும் பொய் குற்றஞ்சாட்டை முன்வைத்தாா்கள். ஆனால், எத்தனால் கலப்புக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest