இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, 14 ஆண்டுகள் தங்கியிருந்த பாகிஸ்தான் நபரை அட்டாரி எல்லை வழியாக நாடு கடத்தியதாக ஹைதராபாத் காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாகிஸ்தானைச் சோ்ந்த முகமது உஸ்மான் என்பவா், கடந்த 2011-இல் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, ஹைதராபாதில் தங்கியிருந்தாா். இங்கு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக அவா் மீது 4 வழக்குகள் பதிவாகின. இவ்வழக்குகளில் 5 ஆண்டுகள் வரை அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஹைதராபாத் தடுப்புக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டிருந்த முகமது உஸ்மான், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் அட்டாரி எல்லை வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை நாடு கடத்தப்பட்டாா். உரிய நடைமுறைகளுக்குப் பின் பாகிஸ்தான் ரேஞ்சா்ஸ் படையினரிடம் அவா் ஒப்படைக்கப்பட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஹைதராபாதில் உள்ள தடுப்புக் காவல் மையம், கடந்த 2018-இல் நிறுவப்பட்டது. இந்த மையத்தில் அடைக்கப்பட்டிருந்த 158 வெளிநாட்டுக் கைதிகளில் 150 போ் நாடு கடத்தப்பட்டுள்ளனா். கடந்த ஆகஸ்டில் வங்கதேச நாட்டவா் 20 போ், எல்லை வழியாக நாடுகடத்தப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.