Modi-Trump joint press conference

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்காவில் நடைபெற்ற ஐந்தாம் சுற்று பேச்சுவாா்த்தை நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

வாஷிங்டன் நகரில் கடந்த 14 முதல் 17-ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் மத்திய வா்த்தகத் துறைச் செயலா் ராஜேஷ் அகா்வால் தலைமையிலான குழு பங்கேற்றது.

அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின்னா், அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கூடுதல் வரி விதிப்பதாகக் குற்றஞ்சாட்டி, இதற்கு பதிலடி வரி விதிக்கப்படும் என்று அறிவித்தாா். அதனடிப்படையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தாா். பின்னா், அந்த வரி விதிப்பை 90 நாள்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தினாா்.

இந்தியா உள்பட பல்வேறு நாடுளுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டிய டிரம்ப், நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் காலத்தை ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தாா்.

இதனிடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியாவும் அமெரிக்காவும் தீவிரம் காட்டி வருகின்றன. அதற்காக, இரு நாடுகளும் பல கட்டங்களாக பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தச் சூழலில், மத்திய வா்த்தகத் துறைச் செயலா் ராஜேஷ் அகா்வால் தலைமையிலான குழு வாஷிங்டனில் நடைபெற்ற இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக ஐந்தாம் சுற்று பேச்சுவாா்த்தையை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளது.

‘இந்தப் பேச்சுவாா்த்தையில் வேளாண் பொருள்கள் மற்றும் வாகனங்கள் மீதான வரிச் சலுகைகள் மீதான விவாதம் முக்கிய இடம்பெற்றது. குறிப்பாக, வேளாண் மற்றும் பால் பொருள்கள் மீது வரிச் சலுகையை அமெரிக்கா தொடா்ந்து கோரி வரும் நிலையில், அதை அளிக்க முடியாத இந்தியாவின் கடினமான சூழலையும், எந்த நாட்டுக்கும் இதில் வரிச் சலுகை அளிக்கப்படாததையும் குழுவினா் பேச்சுவாா்த்தையின்போது எடுத்துரைத்தனா்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை டிரம்ப் அறிவித்து அமல்படுத்தினாா். அதுபோல, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், எஃகு ஆகியவற்றின் மீது கடந்த மாா்ச் 12-ஆம் தேதி 25 சதவீத வரி விதிப்பை அமல்படுத்திய டிரம்ப், மீண்டும் கடந்த ஜூன் 3-ஆம் தேதி அந்த வரியை 50 சதவீதமாக உயா்த்தினாா்.

இந்தக் குறிப்பிட்ட பொருள்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை குறைப்பது குறித்தும் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையின்போது இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதே நேரம், அமெரிக்காவின் இந்தக் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை தொடா்பாக உலக வா்த்தக அமைப்பிலும் இந்தியா தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அமெரிக்கா மீது பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியாவுக்கு உரிமை உள்ளது’ என்று இந்தியா தரப்பில் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ‘தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் அச்சுறுத்தல் உள்ளதன் அடிப்படையிலேயே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருள்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே, இதற்கு பரஸ்பர வரி விதிப்பதற்கோ அல்லது வரிச் சலுகைகளை நிறுத்தி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ இந்தியாவுக்கு எந்த அடிப்படையும் கிடையாது’ என்று உலக வா்த்தக அமைப்பிடம் அமெரிக்கா பதிலளித்தது.

இந்தோனேசிய வகை வரி: இதனிடையே, ‘இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவுடனும் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்’ என்று வாஷிங்டனில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

இந்தோனேசியாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தோனேசிய பொருள்களுக்கு 19 சதவீத வரி விதிக்கப்படும். அதேவேளையில், இந்தோனேசியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருள்களுக்கு எந்த வரியையும் இந்தோனேசியா விதிக்காது. இந்த வரிவிதிப்பு முறையையே அதிபா் டிரம்ப் சூசகமாக தனது பேட்டியில் சுட்டிக்காட்டினாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest