11092_pti09_11_2025_000038b092819

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அமெரிக்காவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதைத்தொடா்ந்து, நிகழாண்டு நவம்பா் மாதத்துக்குள் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள இருநாடுகளின் வா்த்தக அமைச்சகா்களுக்கு அறிவுறுத்தினா்.

இதையடுத்து, கடந்த மாா்ச் மாதம் தொடங்கிய இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றாா்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை இந்திய தொழில், வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல் அமெரிக்காவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக கூறியிருந்தாா்.

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததன் விளைவாக இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில்,‘இந்தியா-அமெரிக்கா இடையே நிலவும் வா்த்தக இடையூறுகளுக்குத் தீா்வுகாணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என குறிப்பிட்டாா்.

இதற்கு பிரதமா் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest