
இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (அக்.1) அமலுக்கு வந்தது.
ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே, ஸ்விட்சா்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கூட்டமைப்புக்கும், இந்தியாவுக்கும் இடையே கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வா்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் என்ற விரிவான தடையற்ற ஒப்பந்தம் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அந்தக் கூட்டமைப்பைச் சோ்ந்த நாடுகள் இந்தியாவில் 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.8.80 லட்சம் கோடி) முதலீடு செய்ய உறுதிமொழி அளித்துள்ளன. அத்துடன் ஸ்விட்சா்லாந்து கை கடிகாரங்கள், சாக்லேட், வைரங்கள் போன்றவற்றை குறைந்த வரியுடன் அல்லது வரிவிலக்குடன் இந்தியாவில் இறக்குமதி செய்யவும் அந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
இந்த ஒப்பந்தம் புதன்கிழமை அமலுக்கு வந்தது. இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வா்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு இந்தியா-இஎஃப்டிஏ ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொதுமக்கள் மற்றும் வணிகத்துக்குப் பலனளிக்கும்’ என்றாா்.