
இந்தியா மீது கணிசமாக வரி உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்கள்கிழமை(ஆக. 4) அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய பொருள்கள் மீதான வரியை இறுதிசெய்து கடந்த ஜூலை 30 அறிவித்தார் டிரம்ப். அதன்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரியும் அத்துடன் அபராதமாக கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7 முதல் இந்த நடவடிக்கை அமலாகிறது.
ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் அபராதமாக கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ரஷியாவிடமிருந்து எரிபொருள், ராணுவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதே மேற்கண்ட கூடுதல் வரி விதிப்புக்கு வித்திட்டுள்ளது.
இந்தநிலையில், இது குறித்து கருத்து தமது சோஷியல் ட்ரூத் சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ள டிரம்ப், “ரஷியாவிலிருந்து அதிகளவு எண்ணெயை மட்டும் இந்தியா வாங்கவில்லை. அதனைத்தொடர்ந்து, வெளிச்சந்தையில் பெரும் லாபத்துக்காக விற்பனை செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.