
இளம் வீராங்கனைகள் இந்திய அணியில் இடம்பிடிக்க மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் உதவுவதாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 50 நாள்கள் உள்ள நிலையில், உலகக் கோப்பைக்கு இன்னும் 50 நாள்களே உள்ளன என்ற பெயரில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், இளம் வீராங்கனைகள் குறித்தும், அவர்கள் அணியில் இடம்பிடிப்பதற்கு மகளிர் பிரீமியர் லீக்கின் பங்களிப்பு குறித்தும் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இளம் வீராங்கனைகள் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு மகளிர் பிரீமியர் லீக் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போது, இளம் வீராங்கனைகள் மிகப் பெரிய அளவில் அழுத்தத்தில் இருப்பதில்லை. நாங்கள் கிராந்தி கௌதின் செயல்பாட்டை பார்த்தோம். அவர் மிகவும் அச்சமின்றி செயல்படுகிறார். அதனை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. இளம் வீராங்கனைகள் சிறப்பாக செயல்படுவது அணியில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலைக் கொடுக்கிறது என்றார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் ஒருநாள் தொடர்!