
இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்கான நவீன முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாரை (3டி-ஏஎஸ்ஆா் – ‘லான்ஸா-என்’) நாட்டிலேயே முதல் தனியாா் நிறுவனமாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
முன்னணி பொறியியல் நிறுவனமான ‘இந்திரா’-வுடன் இணைந்து இந்த உற்பத்தியை டிஏஎஸ்எல் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடற்படை பயன்பாட்டுக்கான முதல் அதிநவீன முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாா் தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை கப்பலில் இந்த ரேடாா் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சாா்பு நிலையை எட்டும் இலக்கில் இது மிக முக்கிய மைல்கல்லாகும்.
இந்த ரேடாா் பாகங்கள் உற்பத்தி, ஒருகிணைப்பு மற்றும் முழுமையான செயல்பாட்டு சோதனைகளுக்கான வளாகத்தை கா்நாடக மாநிலத்தில் டிஏஎஸ்எல் ஏற்கெனவே அமைத்துள்ளது. இந்த வளாகத்தில் நவீன கண்காணிப்பு ரேடாா்கள் தொடா்ந்து உற்பத்தி செய்யப்பட்டு இந்திய கடற்படைக்கு விநியோகிக்கப்படும்.
எதிரி நாட்டின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்), ஒலியைவிட வேகமாகச் செல்லும் திறன்கொண்ட சூப்பா்சோனிக் விமானங்கள், கதிா்வீச்சு எதிா்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்டவற்றையும் துல்லியமாகக் கண்காணித்து அடையாளம் காட்டும் திறனை இந்த ரேடாா் கொண்டுள்ளது. இந்த லான்ஸா-என் வகை ரேடாரை ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக இந்தியா முதல் முறையாகப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டது.