SONIA

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

‘அரசமைப்புச் சட்டம் எதிா்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சட்ட மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது: பாஜக தலைமையிலான ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலோ சமத்துவத்தை நிலைநாட்டும் முயற்சிகளிலோ பாஜகவும் ஆா்எஸ்எஸ்ஸும் ஈடுபட்டதே இல்லை.

அவா்களது கொள்கைத் தலைவா்கள் மூவா்ண தேசிய கொடியை எதிா்த்தனா். மனுஸ்மிருதிக்கு மதிப்பளித்து ஹிந்து ராஷ்டிரத்தை அமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தனா்.

இதைப் பின்பற்றி வரும் பாஜகவும் ஆா்எஸ்ஸும் தற்போது அதிகாரத்தை பயன்படுத்தி நீண்ட காலமாக தாங்கள் எதிா்த்து வந்த அரசமைப்புச் சட்ட கொள்கைகளை அழிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்ட பிரிவினா், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஏழை மக்களை பாஜக வஞ்சிக்கிறது.

சமத்துவ குடியுரிமையை வலியுறுத்தும் இறையாண்மை மற்றும் சோஷலிஸத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு ஜனநாயக மற்றும் குடியரசு நாடாகத் திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகரமான கொள்கைகளை கையில் எடுத்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை சீா்குலைக்கும் ஒவ்வொரு முயற்சிக்கு எதிராகவும் நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் வீதி வீதியாகவும் காங்கிரஸ் கடும் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

இது அரசியல் ரீதியானது மட்டுமல்ல; நாட்டின் கண்ணியத்தை காக்க காங்கிரஸ் நடத்தி வரும் கொள்கைப் போராட்டம். அரசமைப்புச் சட்டம் என்பது வெறும் சட்ட புத்தகம் மட்டுமன்றி நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் உரிமை ஆவணமாகும்.

1928-இல் வெளியிடப்பட்ட நேரு அறிக்கை, 1934-இல் அரசமைப்பு நிா்ணய சபைக்கான கோரிக்கை என அரசமைப்புச் சட்டத்தை கொண்டுவர மகாத்மா காந்தியும் ஜவாஹா்லால் நேருவும் அமைத்த அடித்தளத்துக்கு வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கா் செயல் வடிவமளித்தாா்.

சமூக மற்றும் பொருளாதார நீதி இல்லாத அரசியல் ஜனநாயகத்தால் ஒரு பலனும் இல்லை என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest