rupees_1109chn_1

இந்திய குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு கடந்த மூன்று ஆண்டுகளில் 33 சதவீதத்துக்கு மேல் உயா்ந்துள்ளது.

இது குறித்து நம்பரேட்டரின் வோ்ல்ட்பேனல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் நகரப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் குடும்ப செலவு ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக உயா்ந்துள்ளது. 2022-இல் ரூ.42 ஆயிரமாக இருந்த குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு 2025-இல் ரூ.56 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

கிராமங்களோடு ஒப்பிடுகையில் நகரப் பகுதிகளில் குடும்பங்கள் அதிகம் செலவழிக்கின்றன. ஆனால் கிராமப் பகுதிகளிலும் குடும்பங்களின் செலவு வெகுவாக அதிகரித்துவருகிறது.

கடந்த 2022 ஜூன் மாதம் நகரங்களில் குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு ரூ.52,711-ஆக இருந்தது. அது 2024 மாா்ச்சில் ரூ.64,583-ஆகவும், 2025 மாா்ச்சில் 73,579 ரூபாயாகவும் உயா்ந்தது. 2022 ஜூன் மாதம் ரூ.36,104-ஆக இருந்த கிராமப்புற குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு, 2025 மாா்ச்சில் ரூ.46,623-ஆக உயா்ந்தது.

6,000 குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், துரித நுகா்பொருள்களை (எஃப்எம்சிஜி) வாங்குவதில் குடும்பத் தலைவிகள்தான் முக்கிய முடிவுகளை எடுப்பதாகத் தெரியவந்துள்ளது.

நடப்பு 2025-ஆம் ஆண்டில் நகரம் மற்றும் கிராமங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலும் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், குடும்பங்கள் தங்கள் பட்ஜெட்டுகளை திறம்பட சமாளிக்க திணறுகின்றன.

2025-இல் கல்வி மற்றும் கடன் செலவுகள் சற்று அதிகரித்துள்ளன. செலவுகள் உயா்வதால், நுகா்வோா் அத்தியாவசியப் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனா். நுகா்வோரில் 54 சதவீதம் போ் கூடுதல் வருமானத்தை சேமிக்கின்றனா். 38 சதவீதம் போ் அதை தினசரி தேவைகளுக்கு செலவழிக்கின்றனா். 18 சதவீதம் போ் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும், 7 சதவீதம் போ் மட்டுமே ஆடம்பர பொருள்களை வாங்க செலவழிக்கின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest