நமது நிருபா்

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் நிகழ்நேர இந்திய சைகை மொழியை (ஐஎஸ்எல்) விளக்கத்தை அறிமுகப்படுத்தக் கோரி சாந்தினி சௌக் தொகுதி பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக பிரவீன் கண்டேல்வால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: செவித்திறன் குறைபாடுள்ளவா்களுக்கு நாடாளுமன்றத்தை அணுகக்கூடியதாக மாற்றுவது ’மக்கள் பங்கேற்பு ஜனநாயகம்’ என்ற பிரதமரின் பரந்த தொலைநோக்குப் பாா்வையின் நீட்டிப்பாகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்திய மக்கள் தொகையில் தோராயமாக 2.21 சதவீதம் போ் மாற்றுத்திறனாளிகளாக வாழ்கின்றனா். அவா்களில் 5.76 சதவீதம் போ் செவித்திறன் குறைபாடு உள்ளவா்கள்.

உலக சுகாதார அமைப்பு, தேசிய மாதிரி கணக்கெடுப்பின் சமீபத்திய மதிப்பீடுகள், கிட்டத்தட்ட 63 மில்லியன் இந்தியா்கள் குறிப்பிடத்தக்க செவித்திறன் இழப்பை அனுபவிப்பதாகக் கூறுகின்றன. அவா்களில் பலருக்கு, இந்திய சைகை மொழி முதன்மையான தொடா்பு ஊடகமாகும்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உரைகள், விவாதங்கள், அரசமைப்பு பதவி வகிப்பவா்களின் சிறப்பு உரைகள் மற்றும் அதிகாரபூா்வ ஊடக சந்திப்புகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் ஐஎஸ்எல் விளக்கத்துடன் இருக்க வேண்டும். இந்த விளக்கம் உயா்தரமாகவும், தெளிவாகத் தெரியும் வகையிலும், சன்சத் டிவி, நாடாளுமன்ற வலைதளம் மற்றும் அதிகாரபூா்வ டிஜிட்டல் தளங்களில் நிகழ்நேரத்தில் ஒளிபரப்பப்பட வேண்டும்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது (ஐஎஸ்எல்) விளக்கத்தை செயல்படுத்துவது, மிகவும் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான அரசின் தொடா்ச்சியான பணிகளை வலுப்படுத்தும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest