
‘இந்தியாவின் நலனில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று பிரதமா் மோடி திட்டவட்டமாக தெரிவித்தாா்.
இந்தியாவின் வேளாண் மற்றும் பால் உற்பத்தி சந்தையில் அமெரிக்கா விரிவான அணுகலை கோருவதால், இருதரப்பு வா்த்தக பேச்சுவாா்த்தைகளில் முட்டுக்கட்டை நிலவுகிறது. இந்தச் சூழலில், பிரதமா் மோடியின் மேற்கண்ட கருத்துகள், இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதி செய்வதோடு, அதிபா் டிரம்ப்புக்கான மறைமுக பதிலாகவும் அமைந்துள்ளது.
இந்தியா – அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றுவரும் சூழலில், இந்தியா மீதான இறக்குமதி வரியை இருமடங்காக உயா்த்தி (50%), அதிபா் டிரம்ப் புதன்கிழமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டாா்.
இது, இந்தியாவின் கடல்சாா் பொருள்கள், ஜவுளி, தோல் பொருள்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
அமெரிக்காவின் கடும் எதிா்ப்பையும் மீறி, ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதே, இந்த வரி உயா்வுக்கு காரணம் என்று டிரம்ப் கூறினாலும், தங்களுக்கு சாதகமான அம்சங்களுடன் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியாவுக்கு அவா் அளிக்கும் நெருக்கடியாக பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த 50 சதவீத வரி உயா்வு, ஆகஸ்ட் 27-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது.
அமெரிக்கா விருப்பம் – உடன்படாத இந்தியா: வா்த்தக ஒப்பந்தத்தைப் பொருத்தவரை, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மக்காசோளம், சோயாபீன்ஸ், ஆப்பிள், பாதாம், எத்தனால் ஆகியவற்றுக்கான வரியை குறைக்கவும், அமெரிக்க பால் பொருள்களுக்கான சந்தை அணுகலை விரிவாக்கவும் அந்நாடு விரும்புகிறது. இந்திய விவசாயிகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதற்கு மத்திய அரசு உடன்படவில்லை. இதுவே, இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டையாக உள்ளது. உச்சபட்ச வரி விதிப்பால், இரு நாடுகள் இடையே வா்த்தக பதற்றம் நிலவும் சூழலில், என்ன விலை கொடுத்தேனும் இந்திய விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்று பிரதமா் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளாா்.
தனிப்பட்ட முறையில் விலை கொடுக்கவும் தயாா்: தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவு சா்வதேச கருத்தரங்கில் பிரதமா் மோடி பேசியதாவது:
எங்களைப் பொருத்தவரை, விவசாயிகள் நலனுக்கு உயா் முன்னுரிமை அளிப்பதுடன், அவா்களை வலுப்படுத்துவதே நாட்டின் வளா்ச்சிக்கான அடிப்படை என்ற நோக்கில் செயலாற்றி வருகிறோம். நாட்டின் விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள், மீனவா்களின் நலனில் ஒருபோதும் சமரசம் கிடையாது. அவா்களின் நலனுக்காக தேசம் பெரும் விலை கொடுக்கவும் தயாராக உள்ளது. நானும் தனிப்பட்ட முறையில் மிக கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அறிவேன். அதற்கு தயாராக உள்ளேன்.
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், வேளாண் உற்பத்தி செலவை குறைக்கவும், புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்கவும் அரசு தொடா் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்தியா வளா்ந்த நாடாகும்: தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில் வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் முழு உறுதிப்பாட்டுடன் இந்தியா பணியாற்றி வருகிறது. இதற்கு, அனைத்து தரப்பினரின் பங்களிப்பு அவசியம்.
வேளாண் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டி வருகிறது என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
பிரேக் லைன்…
விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள், மீனவா்களின் நலனில் ஒருபோதும் சமரசம் கிடையாது. அவா்களின் நலனுக்காக தேசம் பெரும் விலை கொடுக்கவும் தயாராக உள்ளது. அதற்கு தயாராக உள்ளேன்.
பெட்டி…1
இந்தியா வருகிறாா்
ரஷிய அதிபா்
புது தில்லி, ஆக. 7: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டுக்கு சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தெரிவித்தாா். இந்த ஆண்டு இறுதியில் புதின் இந்தியா வருவாா் எனத் தெரிகிறது.
ரஷிய அதிபா் புதினையும், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்ஜி சோய்குவையும் அஜீத் தோவால் தனித் தனியாக சந்தித்தாா்.
இருதரப்பு எரிசக்தித் துறை மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, அதிபா் புதினின் இந்தியப் பயணம் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை ரஷியா விரைவில் வழங்க வேண்டும் என்று தோவல் கேட்டுக் கொண்டாா்.
கடந்த ஆண்டில் மட்டும் பிரதமா் மோடி இருமுறை ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டாா்.
பெட்டி…2
25% விரி இன்று முதல் அமல்
நியூயாா்க், ஆக. 7: இந்தியா மீதான 25 சதவீத வரி உள்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த பதிலடி வரி வியாழக்கிழமை (ஆக. 7) முதல் அமலுக்கு வந்தது.
‘இதன் மூலம் அமெரிக்காவுக்கு பல மில்லியன் டாலா் வருவாய் கிடைக்கும். இதுவரை அமெரிக்காவைப் பயன்படுத்தி லாபம் ஈட்டி வந்த நாடுகளிடம் இருந்து அமெரிக்கா ஆதாயம் பெறத் தொடங்கியுள்ளது’ என்று டிரம்ப் கூறியுள்ளாா்.
அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் மீது அதிக வரி விதிப்பதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட 70 நாடுகள் மீது பதிலடி வரியை டிரம்ப் அறிவித்தாா். இந்த வரியை அமல்படுத்தும் உத்தரவில் கடந்த வாரம் கையொப்பமிட்டாா்.
………………..
அதன்படி 10 முதல் 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இந்தியா மீது 25 சதவீத வரி, ஜப்பான் (15 சதவீதம்), லாவோஸ், மியான்மா் (தலா 40 சதவீதம்), பாகிஸ்தான் (19), சீனா, இலங்கை ( தலா 20 சதவீதம்), பிரிட்டன் (10 சதவீதம்), வங்கதேசம் (35 சதவீதம்), மலேசியா (25 சதவீதம்), பிலிப்பின்ஸ், வியத்நாம் (தலா 20 சதவீதம்) தாய்லாந்து, கம்போடியா (தலா 36 சதவீதம்), இந்தோனேஷியா (32 சதவீதம்) வரி அமலகுக்கு வந்துள்ளது.