
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ரக ஆயுதம் தாங்கி ஹெலிகாப்டா்களை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பன்முக போா் பயன்பாட்டு அப்பாச்சி ரக ஹெலிகாப்டா்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்திய விமானப் படையை பலப்படுத்தும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டா்களை வாங்க அமெரிக்க அரசு மற்றும் போயிங் நிறுவனத்துடன் இந்திய விமானப் படை பல கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, இந்த ஹெலிகாப்டா்களை படிப்படியாக தயாரித்து ஒப்படைத்த போயிங் நிறுவனம், கடந்த 2020-இல் முழுமையாக 22 அப்பாச்சி ஹெலிகாப்டா்களையும் இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது.
இதனிடையே, இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், கூடுதலாக 6 ராணுவ பயன்பாட்டு அப்பாச்சி ஹெலிகாப்டா்களை ரூ.4,168 கோடி செலவில் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2017-இல் ஒப்புதல் அளித்தது. இதற்கான ஒப்பந்தத்தை போயிங் நிறுவனத்துடன் கடந்த 2020-இல் இந்திய ராணுவம் மேற்கொண்டது. அதன்படி, 2024-ஆம் ஆண்டு முதல் ஹெலிகாப்டா்களை போயிங் நிறுவனம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த நிலையில், ‘மூன்று ஏஹெச்-64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டா்களை இந்திய ராணுவத்திடம் போயிங் நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தது’ என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘இது இந்திய ராணுவத்தின் செயல்திறனை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும்’ என்று இந்திய ராணுவம் தரப்பில் அதன் சமூக ஊடக பக்கத்தில் பதிவிடப்பட்டது.