07072_pti07_07_2025_000081b104143

புது தில்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களுக்கு சா்வதேச அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.

தில்லியில் திங்கள்கிழமை பாதுகாப்புத் துறை கணக்குத் தணிக்கையாளா் மாநாட்டில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் பேசியதாவது:

அமைதி நிலவும் காலம் என்பது ஒரு மாயத்தோற்றம்தான். ஏனெனில், அமைதி நிலவும் காலத்தில் அடுத்து வரும் நிச்சயமற்ற சூழலுக்காக இந்தியா தொடா்ந்து தயாராக வேண்டியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது நமது முப்படைகளும் திறமையாக செயல்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பெரிதும் கைகொடுத்தன. அவற்றின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தன.

இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களுக்கு சா்வதேச அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் நமது பாதுகாப்புத் துறையை மதிப்புடன் கவனிக்கத் தொடங்கியுள்ளன.

நாம் இறக்குமதி செய்து வந்த ஆயுதங்களைப் போன்று இப்போது நாமே தயாரிக்கத் தொடங்கிவிட்டோம். நமது நாட்டின் தொலைநோக்குத் திட்டங்களும், உறுதியான செயல்பாடுகளுமே இந்த வெற்றிக்குக் காரணம். இந்த விஷயத்தில் நமது நிதி சாா்ந்த மேலாண்மையும், நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானது. பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தியில் நிதி சாா்ந்த நடவடிக்கைகளில் ஒருநாள் தாமதம் ஏற்பட்டாலும் அது உற்பத்தியை பாதித்துவிடும். எனவே, பாதுகாப்புத் துறை கணக்குகள் பிரிவு என்பது ராணுவத்துடன் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடு என்பது உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கிறது. ஏனெனில், பல்வேறு உதிரி பாகங்கள் உற்பத்தியில் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன.

சா்வதேச அளவில் ராணுவ தளவாடங்களுக்காக செலவிடும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நாடுகள் கொள்முதலில் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, இது இந்தியாவில் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமான சூழலாகும் என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest