
பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறுகையில், இனியும் ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது. விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தையும் 10 நாள்களுக்கு ஆய்வுசெய்ய வேண்டும். ஆலைகளில் விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியானால், ஆலைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், கோவில்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.
பட்டாசு ஆலை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உள்ளன. பொதுவாக 10-க்கு 10 அறையில் 4 வாசல்கள் அமைக்கப்பட்டு, ஓர் அறையில் 4 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும்.
ஆனால், இவ்வாறான சிறிய அறைகளை குத்தகைக்கு எடுப்போர், அதற்கான குத்தகைப் பணத்தை எப்படியேனும் எடுத்துவிட வேண்டும் என்று விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். 4 பேர் மட்டும் பணிபுரிய வேண்டிய அறையில் 20 பேர் வரையில் பணியமர்த்தப்படுகின்றனர். இதுவே விபத்துக்கும் உயிரிழப்புக்கும் அடித்தளமாகிறது.
இந்த நிலையில்தான், பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.