
முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், இன்னமும் அவருக்கு ஒதுக்கப்பட்ட 8-வது வகை பங்களாவில் இருந்து காலி செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திரசூட் ஓய்வுப்பெற்றார். விதிமுறைகளின் படி, தலைமை நீதிபதிக்கு 8-வது வகை பங்களாக்கள் ஒதுக்கப்படும். அவரது ஓய்விற்கு பிறகு, அடுத்த ஆறு மாதங்களுக்கு, வாடகையற்ற 7-வகை பங்களாவிற்கு மாற்றப்படுவார்கள்.

பின்னணி என்ன?
ஆனால், சந்திரசூட் ஓய்வு பெற்றப் பிறகும் கூட, 8-வகை பங்களாவிலேயே தங்கி வருகிறார். காரணம், அவருக்கு பிறகு, தலைமை நீதிபதி பொறுப்பேற்ற சஞ்சீவ் கன்னா மற்றும் கவாய் அவர்கள் முன்பு இருந்த வீட்டிலேயே இருந்துகொள்வதாக கூறிவிட்டனர்.
சந்திரசூட்டும் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்கு பிறகு, 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, டெல்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அதே வீட்டில் தங்கி கொள்ள அனுமதி கேட்டிருந்தார்.
அதற்கு ஒப்புக்கொண்ட மத்திய அரசு, அவருக்கு மாதம் ரூ.5,430 லைசன்ஸ் ஃபீஸாக வாங்கி வருகிறது.
இடையில், கால அவகாச நீட்டிப்பிற்கு மேல் நீட்டிப்பு கேட்டு, இன்னமும் சந்திரசூட் அந்த இல்லத்தில் இருந்து காலி செய்யவில்லை.
இது குறித்து கடந்த ஜூலை 1-ம் தேதி உச்ச நீதிமன்றம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது…
“மேலும் கால தாமதம் இல்லாமல், சந்திரசூட் அவரது பங்களாவை காலி செய்ய வழி செய்ய வேண்டும். அவர் கேட்ட நீட்டிப்பு கடந்த மே 31-ம் தேதியுடனே முடிந்துவிட்டது. மேலும், 2022, விதிமுறை 3B-ன் படி, அவரது கால அவகாசம் மே 10-ம் தேதியோடு முடிந்தது”.
இதற்கு சந்திரசூட்டின் பதில்…
“கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வீடு தேடி வருகிறேன். என்னுடைய மாற்று திறனாளி மகள்களுக்கு ஏற்றவாறு சர்வீஸ் அப்பார்ட்மென்ட், ஹோட்டல்களைப் பார்த்தும் கூட, அது ஒத்துவர வில்லை.
அரசு எனக்கு ஆறு மாதங்களுக்கு வாடகை வீடு ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அது முடிந்ததும் அங்கே சென்றுவிடுவோம்”.