
பா.ஜ.க-வின் வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கத்தை எம்.பி. மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, செங்கல்லை ஓரம் கட்டிவிட்டு மோடி அழைத்து வந்து செங்கோலை நிறுவுவோம் எனத் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியது குறித்த கேள்விக்கு, “அ.தி.மு.க-வை முழுமையாகக் கபளீகரம் செய்வதற்கு அமித் ஷா தலைமையில் சதி குழு அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க முழுமையாக அமித் ஷாவின் காலில் விழுந்து கிடைக்கிறது என்பது எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றதிலிருந்தே உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டாவில் ஷிண்டே-வின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வந்ததை போல தமிழகத்திலும் கொண்டுவர நினைக்கிறார்கள். இந்த உண்மையைச் சொன்ன தமிழிசைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க தொண்டர்களைத் தொடர்ந்து பா.ஜ.க அவமானப்படுத்தி, கீழ்த் தரமாக நடத்தி வருகிறது.
இது அமித் ஷாவின் இல்லத்திலிருந்து முகத்தை மூடிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்ததிலிருந்து தெளிவாகிறது. தமிழகத்தில் பா.ஜ.க-விற்கு இடமில்லை என்பதைக் கடந்த 3 தேர்தலில் பார்த்து வருகிறோம். தமிழக மக்களின் பொது எதிரியாக பா.ஜ.க மாறியுள்ளது. வருகிற தேர்தல் பா.ஜ.க-விற்கு எதிரானது என்பதில் சந்தேகம் இல்லை.” என்றார்.
டிடிவி, ஓபிஎஸ் தனி அணி அமைய உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருவது குறித்த கேள்விக்கு, “எத்தனை கூட்டணி அமைந்தாலும் கவலை இல்லை, இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுகவின் தலைமையையும், முன்னாள் அமைச்சர்களையும் புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு மிரட்டலாம். ஆனால் வாக்காளர்கள் தெளிவாக உள்ளனர். யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது தேர்தலின் போது தெரியவரும்” என்றார்.

”ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு எனத் தற்போதுதான் தெரிந்து கொண்டேன் எனக் கமல் ஹாசன் கூறியிருக்கிறார். விஜய்க்கும் இது பொருந்துமா?” என்ற கேள்விக்கு, “கமல்ஹாசன் கட்சி துவங்கிய சூழல் வேறு, நின்ற தேர்தல் வேறு. தற்போது விஜய் கட்சி துவங்கி இருக்கும் சூழல் வேறு” என்றும்,
வாக்கு திருட்டு எதிரான ராகுல் காந்தியின் முன்னெடுப்பு வாக்காளர்களிடம் எவ்வாறு சென்று சென்றுள்ளது என்ற கேள்விக்கு, “மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. மோடி அரசு மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசு. அவர்கள் வாக்கு திருட்டு மூலம் ஆட்சியைப் பிடித்துள்ளனர். வாக்கு மக்களின் உரிமை என்பதையும், மோடி அரசு பதவி விலக வேண்டும் என்பதையும் பொது மக்களிடம் நாங்கள் கொண்டு சேர்க்கிறோம்” என்றார்.